பி.சி.ஆர் சோதனை குறைக்கப்படாது – சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

Sunday, November 8th, 2020

நாட்டில் கொரோனா தொற்றினை கண்டறிவதற்கான புதிய விரைவான அன்டிஜென் பரிசோதனை அறிமுகப்படுத்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் பி.சி.ஆர் சோதனை தொடர்பாக நிலவிய பிரச்சினைகள் இப்போது சரிசெய்யப்பட்டு, தற்போது அதிகபட்ச அளவில் நாளொன்றுக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய நாட்களில் முல்லேரியா மருத்துவமனையில் பி.சி.ஆர் இயந்திரம் சரியாக செயற்படாததால் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக சுதத் சமரவீர கூறினார்.

இதற்கிடையில், பி.சி.ஆர் சோதனைக்கு மாற்றாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள அன்டிஜென் அடிப்படையிலான விரைவான நோயறிதல் பரிசோதனையின் தரத்தை மருத்துவ நிபுணர்கள் குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது.

வைரஸ் உள்ள எந்தக் தரப்பினரை அன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்பதை அறிய நிபுணர் குழு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த புதிய சோதனை முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், பி.சி.ஆர் சோதனையை விட குறுகிய காலத்திற்குள் முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு பி.சி.ஆர் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டதைப் போல பெரிய இயந்திரங்கள் எதுவும் தேவையில்லை என்றும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts: