பி.சி.ஆர் சோதனைக்கு ஒத்துழைக்காத தனியார் போக்குவரத்து துறையினருக்கு சேவையில் ஈடுபட தடை – ஊர்காவற்றுறையில் அதிரடி நடவடிக்கை!

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமையால் அவர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, சுகாதார நடைமுறைகளை அரசு வர்த்தமானி வெளியிட்டுள்ளது. அதன்படி, சுகாதார நடவடிக்கைகளை மீறுபவர்களை சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்குவது, தொடர்பாக அது தொடர்புடைய நிறுவனங்களிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், பல இடங்களில் குறிப்பாக வடபகுதியில் அவை முழுமையாக அமுல்ப்படுத்தப்படாத நிலை காணப்படுவதாக பல தரப்பினரிடமும் இருந்து கேள்வியெழுந்திருந்த நிலையில், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதி தீவிரமாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் ஊர்காவற்றுறை சந்தை வியாபாரிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டவர்கள் மீது இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தனியார் பேருந்து சங்கத்திற்கு சுகாதார அதிகாரகள் சென்றபோது, அங்கு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தது தெரிய வந்ததையடுத்து, ஊர்காவற்றுறையிலுள்ள தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களை இன்று பிசிஆர் பரிசோதனைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், இன்று சாரதிகள், நடத்துனர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு செல்லவில்லை. இதையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள் ஊர்காவற்றுறை தனியார் பேருந்து சங்க அலுவலகத்தை 14 நாட்களிற்கு மூட உத்தரவிட்டுள்ளனர். அங்கு வெளியாட்களும் வந்து செல்வதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊர்காவற்றுறையிலுள்ள பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே சேவையில் ஈடுபடலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை மாற்று சாரதி, நடத்தனர்களை பாவித்து சேவையில் ஈடுபடவும் சுகாதார பகுதியினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை ஊர்காவற்றுறையில் சுகாதார நடைமுறைகளை மீறி இயங்கிய கள்ளுத்தவறணையும் மூடப்பட்டுள்ளது. அதன் நடத்திநரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
முன்பதாக ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 வரையான கள்ளுத்தவறணைகள் செயற்பட்டு வரும் நிலையில், அவற்றிற்கு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.
தவறணையில் வைத்து கள் அருந்த முடியாது, விற்பனை மட்டுமே செய்ய முடியும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதை ஊர்காவற்றுறையிலுள்ள கள்ளுத் தவறணைகள் பின்பற்றின.
ஆனால், ஊர்காவற்றுறை நகரிலுள்ள தவறணையில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை. தவறணையில் வைத்து கள் அருந்த அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சோதனை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள், தவறணையை 14 நாட்களிற்கு மூடியுள்ளனர். அத்துடன் தவறணை நடத்துநரை 14 நாட்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|