பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அதிகாரிகள் தடையாகவுள்ளனர் – மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

Wednesday, May 6th, 2020

சுகாதார அமைச்சின் கீழ்வரும் மருத்துவ ஆய்வுகூடங்களில் பிசிஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அதிகாரிகள் தடையாகவுள்ளனர் என மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் குற்றம்சாட்டியதுடன் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளை 300 லிருந்து ஆயிரமாக அதிகரிக்க முடியாமலுள்ளது, இதற்கு காரணம் அந்த நிறுவகத்தில் உள்ள பல தொற்றுநோய் நிபுணர்களே என மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் மேற்கொள்ளவில்லை என தமது கடிதத்தில் தெரிவித்துள்ள மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் மாறாக எங்களின் பணியை அவர்கள் முன்னெடுக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்

அத்துடன் கொவிட் 19 காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதி செய்வதற்கு என்ன பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் உத்தரவிடக்கூடாது என மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்க ஆய்வுகூடங்களில் நாளொன்றிற்கு ஆயிரம் பிசிஆர் சோதனையை மேற்கொள்ள முடியும் ஆனால் 300 சோதனைகளையே மேற்கொள்கின்றோம் எனவும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளனர்.

மிக முக்கிய பிரமுகர்கள் உட்பட கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் 14 நாட்களிற்கு ஒரு முறை சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் நோய் தொற்றிற்கு உள்ளாக கூடிய ஆபத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: