பிளவுபட்டு செயற்படும் காலம் இதுவல்ல – நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தருணம் இது – புதிய பிரதி சபாநாயகர் வலியுறுத்து!

Wednesday, May 18th, 2022

பிளவுபட்டு செயற்படக் கூடிய காலம் இதுவல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தருணம் இது என்பதை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டுமென புதிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள அஜித் ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் பிளவுகளை ஏற்படுத்தலாம். இது பிளவுபடவேண்டிய காலமல்ல. அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்ய வேண்டிய காலம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் சபையில் உரையாற்றிய அவர், தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

அண்மைய வன்முறை சம்பவத்தின் போது படுகொலை செய்யப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உண்மையில் அந்தப் படுகொலை பயங்கரவாத செயல் என்றே நான் கூறுவேன். வடக்கிலிருந்த பயங்கரவாதத்தை தற்போது தெற்குக்கு கொண்டு வர சில சக்திகள் முயற்சி செய்கின்றன.

நாம், நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளையின்படி செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் விமர்சனங்களும் கால விரயங்களும் இல்லாமல் போகும். அதேவேளை நாம் பிளவுபட்டு நின்று செயற்படாமல் ஒற்றுமைப்பட வேண்டும்.

இதேநேரம் பிரதி சபாநாயகர் பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. நான், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி நீதியாக செயற்படுபவன் என்ற வகையில் எதிர்க்கட்சியினரும் எனக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அந்த வகையில் நாம் ஒன்றுபட்டால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சட்ட, திட்டங்கள், நிலையியற் கட்டளை உத்தரவுகளுக்கிணங்க நாம் செயற்படுவது கால விரயத்தை தவிர்ப்பதற்கு உதவும். கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.

அத்துடன் நாட்டின் சட்டங்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும். நான், நாடாளுமன்றத்திற்கு புதிது என்றாலும் எனக்கு 25 வருட அரசியல் அனுபவம் உள்ளது. பிரதேச சபைகளிலும் மேலும் நிறுவனங்களிலும் நான் பல பதவிகளை வகித்த அனுபவமும் திறமையும் எனக்கு உண்டு என்பதாலேயே இந்தப் பதவிக்கு என்னை தெரிவு செய்துள்ளனர். தொடர்ந்ததும் நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: