பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் தொழில்துறையை ஊக்குவிப்போம் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

நலிந்து கிடக்கும் எமது மக்களின் எதிர்காலத்தையும் அவர்களது தேவைப்பாடுகளையும் முன்நிறுத்தி, பின்தங்கிய நிலையில் காணப்படும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி அதனூடாக எமது மக்களின் வாழ்வாதார நிலைமைகளைத் தூக்கி நிறுத்த நாம் அயராது உழைத்துவருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வட்டாரச் செயலாளர் முத்தழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சமகால அரசியல் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
நாட்டில் நடந்து முடிந்த அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் பல்வேறுவகையான துன்ப துயரங்களை சுமந்து வாழ்ந்துவருகின்றனர். இத்தகைய மக்களின் வாழ்வியலில் மாறுதல்களை கொண்டுவருவதற்காக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் பல்வேறு வகையான நலத் திட்டங்களை உருவாக்கி அவர்களது வாழ்வியல் நிலைமைகளை தூக்கி நிறுத்தியிருந்தார்.
ஆனாலும் தற்போது மக்களின் நலன்சார் தேவைகள் நிவர்த்தி செய்து கொடுக்கப்படுவது குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் இன்று பல ஆயிரம் இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்கள் இன்றி பெரும் அவலங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் எமது இளைஞர் யுவதிகளின் வாழ்வியலை மாற்றியமைப்பதற்காக பின்தங்கிய நிலையில் காணப்படும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் கருதியதாக அப்பிரதேசங்களில் உள்ள படித்த மற்றும் கல்வித்தரம் குறைந்த அனைவரையும் ஒன்றிணைத்ததான தொழில் துறைகளை உருவாக்கி அதனூடாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
ஆனாலும் எமது இந்த மக்களின் நலன்சார் முன்னகர்வுகள் வெற்றிபெறுவதற்கான அரசியல் பலம் எம்மிடம் இன்று குறைவாகவே உள்ளது. இவ்வாறான நலத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு எமது அரசியல் பலம் அதிகரிக்கப்டவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு – என்றார்.
இதன்போது கட்சியின் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் உடனிருந்தார்.
Related posts:
|
|