பிரெண்டிக்ஸ் கொத்தணிக்கு இன்றுடன் 14 நாட்கள் பூர்த்தி – அடுத்த ஒருவாரம் தீர்மானம் மிக்க காலமாக இருக்கும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, October 18th, 2020

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையை மையப்படுத்தி கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் முடிவடைகின்றது.

இந்நிலையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு அமைய, அடுத்தவாரம், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்தவாரம் வினைத்திறனாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தால், அது மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியை கட்டுப்படுத்துவதற்கான பிரதான புள்ளியாக அமையும் என்றும் கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு வலையத்தை அண்மித்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் அங்கு 33 கொவிட்19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, இலங்கை முதலீட்டு ஊக்குவிப்ப சபையின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 14 ஆக பதிவாகியுள்ளது. இதன்படி நாட்டில் இதுவரையில் 5 ஆயிரத்து 475 பேருக்கு கொவிட் 19 நோய்த் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா நோயுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 67 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 3 ஆயிரத்து 395 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, கம்பஹாவில் கொரோனா பரவல் தீவிரடைந்தநிலையில், கொழும்பு மாவட்டம் குறித்தும் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதிகபடியான பொருளாதார மையங்கள் கொழும்பில் இயங்குவதுடன், சனநெரிசல்மிக்க பகுதியாகவும் இருப்பதால், கொழும்பு மாவட்டத்தில் இந்த நோய்த்தாக்கத்தை தடுப்பது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், இதுவரையில் கொழும்பில் இந்த நோய் பரவுவதற்கான ஆபத்து இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதும், அவர்கள் ஊடாக ஏனையோருக்கு அந்த நோய் பரவாதிருப்பதற்கான உயர்ந்தபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த மேலும் 26 பேர் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நடத்தப்படும்  தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொரோனா கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 66 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, இதுவரையில் 53 ஆயிரத்து 937 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் முப்படையினரால் நடத்தி செல்லப்படும் 82 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 9 ஆயிரத்து 386 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்19ஐ கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க கொரோனா நோய் பரவல் தொடர்பாக சமுக ஊடகங்களில் வெளியாக்கப்படும் போலிச் செய்திகள் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: