பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி அமைப்பாளர் ரங்கன் தெரிவிப்பு!

Saturday, February 25th, 2023

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக அமைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட ஊடகப் போச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் பிரபாகரனது இறப்பு தொடர்பான உண்மைகள் பொதுவெளிக்கு வரும் என்றும் அப்போது சிவாஜிலிங்கம் போன்றவர்களது பொய்மைகள் அனைத்தும் அம்பலப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ரெலோ அமைப்பின் உறுப்பினரான சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்தொன்று தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25.02.2023) ஊடகவியலார் சந்திப்பன்றை மேற்கொண்ட ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில் –

தமிழரது உரிமைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும்வரை புலிகள் அமைப்பினரை அழிப்பதிலும் அழிவை ரசிப்பதிலும் அதீத அக்கறைகாட்டிவந்த தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலே அமைப்பினர் புலிகளின் தலைவர் பிரபாகரனது இறப்பிலும் மகிழ்வடைந்தவர்கள் என்றும் சுட்டிக்காட்டிய ஶ்ரீரங்கேஸ்வரன்  தமது அரசியல் சுயலாபங்களுக்காக பொதுவெளிகளில் உண்மையை மறைத்து பொய்மையை பாதுகாப்பதில் சிவாஜிலிங்கம் போன்றோர் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக தமிழக அரசியல் பிரமுகர் பழ நெடுமாறன் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகங்கள் எழுப்பியிருந்த கேள்வியின்போது – பிரபாகரன் இன்று இந்த உலகத்தில் இல்லை இனி வரப்போவதும் இல்லை. உயிருடன் இருப்பதான செய்திகள் ஒவ்வொன்றும், அதை கூறுபவர்களது அரசியல் தேவைக்கான தொன்றாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரெலோ அமைப்பின் உறுப்பினரான சிவாஜிலிங்கம் எமது கட்சியியையும் தலைவரையும் ஊடக சந்திப்பொன்றை நடத்தி விமர்சனம் செய்திருந்தார். இது தாம் தொடர்ந்தும் கூறிவரும் பொய்மையை பாதுகாப்பதற்காகவே அவரால் கூறப்பட்டது.

இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் அதன் தலைவரையும் மக்கள் நன்கு அறிந்திருப்பதன் வெளிப்பாடாகவே 1994 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை தொடர்ந்தும் நாடாளுமன்றத்தக்கு அனுப்பி வருகின்றார்கள்.

ஆனால் சிவாஜிலிங்கத்தையும் அவரது கட்சியின் செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருப்பதன் காரணமாகவே அவரை மக்கள் நிராகரித்து வருகின்றனர். இதனால் அவர் பல்வேறு குழுக்கள் கோஸ்டிகள் அணிகள் என்று ஒரு நிலையான இடமின்றி தாவித்தாவி திரிவதை கண்ணுடாக கண்டுகொண்டிருக்கின்றோம்.

இதேவேளை சிவாஜிலிங்கம் தரப்பினர் குடாநாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் சக போராளிகளையும் பொதுமக்களையும் நோயாளர்களையும் சுட்டு கொன்று குவித்து கோடூரம் புரிந்ததுடன் வவுனியாவிலும் கிழக்கு மாகாணத்திலும் வரதன் குழு என்ற பெயரில் செயற்பட்டு புலிகள் இயக்க உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் கடத்தில் கொலை கப்பம் சித்திரவதைகள் என பல அட்டூழியங்களை செய்துவிட்டு இன்று எங்கள் கட்சி மீது சேறு பூச முனைவது  புலிகளின் சொத்துக்களை  புலம்பெயர் தேசங்களில் முடக்கிவைத்திருக்கும் பினாமிகளிடமிருந்து கூலி வாங்குவதற்காக மட்டும்தான்.

எனவே சிவாஜிலிங்கம் போன்றவர்கள் எமது கட்சியைப்பற்றியோ தலைமையை பற்றியோ விமர்சனம் செய்வதற்கு எவ்வித அடிப்படை தகைமையும் அற்றவர்கள் அதேநேரம் பிரபாகரனது இறப்பு தொடர்பான உண்மைகள் காலகிரமத்தில் பொது வெளிக்கு வரும் என்றும் அப்போது சிவாஜிலிங்கம் போன்றவர்களது பொய்மைகள் அம்பலப்படும் என்றும் என தெரிவித்த ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: