பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் காலமானார்!

Friday, September 25th, 2020

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் உயிரிழந்துள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்பிபி உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக நேற்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி எஸ்பிபி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சரியாக 1.04 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த எஸ்பிபிக்கு வயது 75 ஆகும், அவரின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்.

முன்பதாக கடந்த மாதம் ஐந்தாம் திகதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 15 ஆம் திகதி மோசமடைந்தது. இந்நிலையில் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையிலேயே, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, 1946 ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1966 ஆம் ஆண்டுமுதல் திரைப்படங்களில் பாடல் பாடி வருகின்றார்.

பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள அவர், உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

இந்திய அரசு இவருக்கு 2001ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011ம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. 2016ம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: