பிரதேச சபை எல்லைகளிலுள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காணும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 14th, 2021

பிரதேச சபை எல்லைகளில் அடையாளங் காணப்படும் நகர பிரதேசங்களை நகர மற்றும் கிராமங்களை உருவாக்கும் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பிரகடனப்படுத்துவதற்கு  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகரப் பிரதேசமாக வகைப்படுத்தும் போது அதற்காகப் பிரயோகிக்கும் முக்கியமான குறிகாட்டியாக ‘நிர்வாக ரீதியான அலகு’ பயன்படுத்தப்படும்.

அதற்கமைய, மாநகர சபை மற்றும் நகர சபைகள் மாத்திரம் தற்போது உத்தியோகபூர்வமாக நகரப் பிரதேசங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த குறிகாட்டிகளில் காணப்படும் குறைபாடுகளால் கூடுதலாக நகரமயமாகிய பிரதேசங்கள் இன்னும் கிராமிய பிரதேசங்களாகவே இனங்காணப்படுவதால், நகரமயமாதல் பற்றிய சரியான வரைவிலக்கணப்படுத்தலின் தேவை உருவாகியுள்ளது.

2000 ஆம் ஆண்டு 49 ஆம் இலக்க திருத்தப்பட்ட 1946 ஆம் ஆண்டு 13 இலக்க நகரங்கள் மற்றும் கிராமங்களை உருவாக்கும் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நகர அபிவிருத்திப் பிரதேசத்தைப் பிரகடனப்படுத்தும் அதிகாரம் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆலோசனைக் குழுவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு பிரதேச சபை எல்லைகளில் அமைந்துள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காண்பதற்கும், குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய பிரதேச சபை எல்லைகளில் அடையாளங் காணப்படும் நகர பிரதேசங்களை நகர மற்றும் கிராமங்களை உருவாக்கும் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பிரகடனப்படுத்துவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: