பிரதேசசெயலக ரீதியாக தொழிற்சாலைகள் நிறுவி தொழில் வாய்ப்பளிக்கும் முதலீட்டாளருக்கு ஊக்குவிக்க விசேட திட்டம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, June 9th, 2021

நாட்டின் அபிவிருத்தியில் பிரதேச ரீதியான சமத்துவமற்ற தன்மையைக் குறைப்பதுடன் கிராமிய வளங்களில் உயரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கிராமங்களில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக – கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் – பிரதேசசெயலக மட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை ஊக்குவித்தல், அதன்மூலம், கிராமிய மட்டத்தில் பலம்வாய்ந்த தொழில் முயற்சியாளர்களின் வலையமைப்புபை உருவாக்கி தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல், பிரதேச ரீதியாகப் பரந்து காணப்படும் வளங்கள் மற்றும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பெறுமதிசேர் உற்பத்திகளை மேம்படுத்தல்,மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும், இறக்குமதிக்கான பதிலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் – குறைந்தபட்சம் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் – குறைந்தபட்சம் 100 மில்லியன் ரூபா முதலீடு செய்து குறைந்தது 50 தொழில் வாய்ப்புக்களை உருவாக்குகின்ற, தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரங்களை ஆரம்பிக்கும் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு சலுகைகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்தள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

000

Related posts: