பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு!

Tuesday, May 17th, 2022

பிரதி சபாநாயகராக ஆளுந்தரப்பினால் முன்மொழியப்பட்ட அஜித் ராஜபக்ஷ 31 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்.

வருதியாக இருந்த பிரதி சபாநாயகர் பதவிகர் தெரிவு இன்றையதினம் நடைபெற்றது. குறித்த பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததோடு, லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி அந்த யோசனையை ஆமோதித்தார்.

இதற்கிடையில், ஜி.எல்.பீரிஸ் எம்.பி அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்ததுடன், பண்டார எம்.பி பிரேரணையை ஆமோதித்தார்.

எனினும், பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த விமல் வீரவங்ச, பணத்தை வீண்விரயம் செய்யாமல் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

தேர்தலை நடத்துவதற்கு சுமார் 9 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். ஆனாலும் இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

குறித்த வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷவுக்கு 109 வாக்குகளும், ரோஹினி கவிரத்னவுக்கு 78 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனிடையே 23 வாக்குகள் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 31 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றையதினம் காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

அத்துடன் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதனிடையே எதிர்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் தரப்பின் முன் வரிசையில் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் தரப்பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: