பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் பதவி விலக தயார் -தேரர்களிடம் வாக்குறுதியளித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!

Thursday, April 28th, 2022

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

பதவி விலகுகிறேன்,பதவி விலக தயாராகவுள்ளேன் எவ்வித பிரச்சினையும் கிடையாது. இருப்பினும் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்க தாமதம் ஏற்படுமாயின் நாட்டில் அரச நிர்வாகம் இல்லாமல் போகும். இடைவெளியை நிரப்புவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும். அக்காலப்பகுதியில் நாடு முழுமையாக அழிவு நிலைக்கு செல்லும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமல்லாது அரச தலைவரின் வசமுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என பிரதமரிடம் குறிப்பிட்டோம். அரச தலைவரின் அதிகாரத்திற்கமைய நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது.

பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலகினால் நாடு ஸ்தீரத்தன்மையை இழக்கும். நாடு ஸ்தீரத்தன்மையை இழந்தால் தற்போதைய நிலைமை பாரதூரமான விளைவுகளுக்கு கொண்டு செல்லும் என பிரதமர் தொடர்ந்து குறிப்பிட்டார். நான் பதவி விலக தயார், சந்தேகம் கொள்ள வேண்டாம்.

நாடாளுமன்றில் உள்ள சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆராயுங்கள் என்று பிரதமர் வலியுறுத்தியதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: