பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Monday, July 27th, 2020

ஒரு வாரமாக பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்ற நிலையில் சுகாதார அமைச்சிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய கொழும்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூடி தீர்மானிக்கவுள்ளது எனச் சங்கத்தின் உப தலைவர் சரவணபவன் தெரித்துள்ளார்.

அத்தோடு தமது கோரிக்கைகளுக்கான பதிலை வழங்குவதில் சுகாதார அமைச்சு அசமந்தப்போக்குடன் செயற்படுவதால், பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் “எமக்கு பிறிதொரு தொழிற்சங்கத்துடன் போராட்டம் இல்லை. இது கொரோனா தொற்றிலிருந்து நாட்டையும் அப்பாவிப் பொதுமக்களையும் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். இந்தப் போராட்டத்துக்குத் தேவையான சட்டம், அதிகாரங்கள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு நேரடியாகவோ அல்லது வேறு முறையிலேனும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.

இந்தப் பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலையிட்டு எமக்கான தீர்வை வழங்க வேண்டும். எமக்கு வேறு எந்தவொரு சங்கத்துடனும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதைத் தெரியப்படுத்துகின்றோம்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்காக பொது சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்படும் அர்ப்பணிப்பான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில்

சதிச் செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் மத்தியிலும் பொது சுகாதார பரிசோதகர்களின் சேவையை பாதிப்படையச் செய்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன” என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts: