பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி ஊர்வலம் ஆரம்பம்!

Friday, December 2nd, 2016

காஸ்ட்ரோவின் அஸ்தியை எடுத்துச் செல்லும் நான்கு நாள் ஊர்வலத்தின் ஓர் அங்கமாக மறைந்த கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் சக புரட்சித் தலைவரான சேகுவேராவின் சாமாதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் குடுவை கண்ணாடி பெட்டிக்குள் ஏற்றிச் செல்லும் இராணுவ வாகனத்திற்கு தங்களது மரியாதையை செலுத்த அதிக அளவிலான மக்கள் கூட்டம் வீதிகளில் ஒன்று திரண்டிருந்தனர். இவர்கள் பிடல் காஸ்ட்ரோவின் பெயரை கோஷமிட்டும், கியூபாவின் கொடியை அசைத்தும் தலைநகர் ஹவானாவில் அணி வகுத்து நிற்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

இந்த அஸ்தி அடங்கிய வாகனம், புரட்சி ஆரம்பமான சாண்டியாகோ டே கியூபாவை நோக்கிய நான்கு நாள் பயணத்தை தொடங்கியுள்ளது.

காஸ்ட்ரோ 1959 ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த ஆட்சியை தூக்கியெறிந்து தனது வெற்றி அணி வகுப்பை நடத்திய பாதையின் முடிவிலிருந்து தொடக்கத்திற்கு காஸ்ட்ரோவின் அஸ்தி அடங்கிய இந்த வாகனம் பயணிக்கவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மரணித்த காஸ்ட்ரோவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது சாம்பல் ஞாயிறன்று அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்த்தி புதன்கிழமை இரவு சேகுவேராவின் எலும்புகள் வைக்கப்பட்ட சமாதி இருக்கும் இடத்தில் நிறுத்தப்பட்டது.

சேகுவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ மெக்சிகோவில் சந்தித்து கியூப புரட்சிக்கான ஏற்பாடாக ஆயுதப் பயிற்சிகள் பெற்ற பின்னரே 1956, நவம்பர் 25 ஆம் திகதி கியூபா சென்றனர். சி.ஐ.ஏ ஆதரவு பொலிவிய படையினரால் 1967 ஆம் ஆண்டில் தனது 37 ஆவது வயதில் கொல்லப்பட்ட சேகுவேராவின் எச்சங்கள் 1997 கியூபாவுக்கு கொண்டுவரப்பட்டு சான்டா கிலாரா நகரில் அடக்கம் செய்யப்பட்டது.

coltkn-12-02-fr-03170702480_5068809_01122016_mss_cmy