பிச்சை எடுத்தாவது பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுங்கள் – வலயகல்விப் பணிப்பாளர்!
Monday, November 7th, 2016
பெற்றோர்கள் பிச்சை எடுத்தாவது பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுங்கள். உடை மற்றும் உணவு வழங்கும் அளவிற்கு கல்வியையும் கொடுங்கள் என கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.
வாகரை வம்மிவட்டவான் வித்தியாலய பரிசளிப்பு மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தத்துணிவாக நடவடிக்கைகள் செய்யாமை காரணமாகவே, கல்குடா வலயத்தின் பரீட்சை பெறுபேறுகள் கீழ் நோக்கிச் சென்றன.அதிபர் நியமனத்தையும், ஆசிரியர் இடமாற்றத்தையும் நான் தத்துணிவாக செய்தேன். இதனாலேயே என்னை பிழை கூறுவது அதிகமாக உள்ளது.
நாட்டின் ஜனாதிபதியை சந்திப்பதற்காக சென்ற நாசிவன்தீவு பாடசாலையில் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனிடம் என்ன உதவி தேவை என கேட்ட போது பாடசாலைக்கு கணனி வசதி தேவை என கூறியதற்கிணங்க இரண்டு மாதங்களில் கணனி கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எண்பது வருடங்களுக்கு பின் சித்தி பெற்ற மாணவன் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்ததுடன், பாடசாலைக்கு கணனி கூடத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளான். வாகரைப்பிரதேச மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று பட்டம் பெற்றால் இப்பிரதேசத்தை முன்னேற்ற முடியும். கல்குடா கல்வி வலய பிரதேசங்களில் இருந்து ஆசிரியர்களை உருவாக்குவது கடினம். எனவே வெளி இடங்களில் இருந்துதான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது.
எனவே வாகரைப் பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றால் இப்பிரதேசத்தை தலை நிமிர்த்த முடியும் என சுட்டிக்காட்டினார்.
மேலும், பெற்றோர்கள் பிச்சை எடுத்தாவது பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றுங்கள் அத்துடன் ஆசிரியர்களும் அவர்கள் வழங்கும் தியாகத்தின் மூலம் வாகரைப் பிரதேசத்தின் கல்வியை கட்டியெழுப்ப முடியும் என செ.ஸ்ரீகிருஸ்ணராஜா கூறியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|