பாவ மன்னிப்புக் கோரிய போப் ஆண்டவர்!
Sunday, December 3rd, 2017
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்த போப் ஆண்டவர், அந்த மக்கள் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரியதுடன் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முஸ்லிம், பௌத்தம், ஹிந்து மற்று கிறிஸ்த்தவ மதத்தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய போப் ஆண்டவர், மியான்மர் பயணத்தின் போது சொல்ல மறுத்த “ரோஹிங்கியா“ என்ற சொல்லுடன் ரோஹிங்கியா இன மக்களை அழைத்துள்ளார்.இக்கூட்டத்திற்காக காக்ஸ் பஜாரில் தஞ்சமடைந்திருக்கும் 16 ரோஹிங்கியாக்கள் (12 ஆண்கள், 2 இரண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள்) டாக்காவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.மியான்மர் – பங்களாதேஷ் எல்லையோரத்தில் உள்ள காக்ஸ் பஜாரில் 620,000 ரோஹிங்கியா அகதிகள் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலை ஆசியாவின் மிகமோசமான அகதிகள் நெருக்கடி என வர்ணிக்கப்படுகின்றது.
ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை வாழ்த்தி வரவேற்று கைகளைப் பற்றிய போப் ஆண்டவர், துன்பங்கள் நிறைந்த அவர்களின் கதைகளைக் கேட்டுள்ளார்.ரோஹிங்கியா மக்களை கடவுளுடன் ஒப்பிட்ட போப் ஆண்டவர், “உங்களை துன்பத்திற்கு உள்ளாக்குபவர்கள், உங்களை துன்புறுத்தியவர்கள், உங்களை காயப்படுத்தியவர்களின் பெயரால் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
எல்லாவற்றிருக்கும் மேலாக இவ்வுலகம் உங்கள் மீது காட்டுகின்ற அலட்சியத்திற்கும் மன்னிப்புக கோருகிறேன்” என்றார்.
ரோஹிங்கியா அகதிகளை அனுமதித்த பங்களாதேசத்தின் பெரிய மனதை சுட்டிக்காட்டிய போப் ஆண்டவர், “இப்போது பெரிய மனம் படைத்த உங்களிடம் (ரோஹிங்கியா) நாங்கள் கோரியுள்ள பாவமன்னிப்பை தருமாறுக் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா அகதிகளுக்கு தொடர்ந்து உதவிகள் கிடைக்கவும், அவர்கள் உரிமைகள் அங்கீகரிக்கப்படவும் ஆதரவுக் குரல்கள் எழுப்ப வேண்டும் என அவர் வேண்டியுள்ளார்.மியான்மர் அரசு ரோஹிங்கியா இன மக்களை பெங்காலிகள் என வர்ணிக்கும் சூழலில், மியான்மர் பயணத்தின் போது “ரோஹிங்கியா” என்ற சொல்லை போப் ஆண்டவர் தவிர்த்தது கடும் விமர்சனங்களை உருவாக்கியிருந்தன.மியான்மர் பயணத்தை நிறைவுச் செய்து பங்காளதேஷ் வந்துள்ள போப் ஆண்டவர், இப்போது ரோஹிங்கியா இன மக்களை ‘ரோஹிங்கியா’ என்ற சொல் கொண்டு அழைத்துள்ளார்.
Related posts:
|
|