பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Saturday, June 26th, 2021நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு 100 ரூபாய்க்குக் குறைவான விலையிலேயே அரிசியை விற்பனை செய்யவேண்டும் என்று உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயித்தோம். அரசாங்கத்தினால் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டதுடன் அதனைப் பின்பற்றாதோருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறிருந்தும்கூட சதொச தவிர்ந்த பெருமளவான விற்பனை நிலையங்களில் நிர்ணயவிலையை விடவும் அதிக விலைக்கே அரிசி விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் தற்போது நாட்டின் நெல் மற்றும் அரிசியின் கையிருப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அது ஒருமாதத்திற்கும் குறைவான காலத்திற்கே போதுமானதாக அமையும்.
அதன்காரணமாக ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்குத் தீர்மானித்திருக்கிறோம்.
அதற்குரிய விலைமனுக்கோரல் படிவங்கள் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்யவிரும்பும் எந்தவொரு தரப்பினரும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் விலைமனுக்கோரலைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
அதன்படி எவ்வித ஊழல் மோசடிகளுமின்றி குறைந்த விலையில் தரமான அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். விலைமனுக்கோரல் படிவங்கள் பூர்த்திசெய்யப்படுவதற்கு 10 நாட்கள் வழங்கப்பட்டதன் பின்னர், இறக்குமதி தொடர்பில் நிறைவேற்றப்பட வேண்டிய ஏனைய விடயங்கள் பூர்த்திசெய்யப்படும்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியானது, உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக அரசாங்கத்தினால் நிர்ணயவிலையில் விற்பனை செய்யப்படும். ஜனாதிபதியை சந்தித்தபோது இதுகுறித்துக் கலந்துரையாடினேன். அப்போது அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தேவைப்படும் சுமார் ஒருமாதகாலப்பகுதியில் உள்நாட்டு வியாபாரிகளுக்கு இறுதி வாய்ப்பொன்றை வழங்குமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைவாக உள்நாட்டு வியாபாரிகள் அரிசியைப் பதுக்கிவைத்திருந்தால், அவற்றை சந்தையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த விலையில் விற்பனை செய்யமுடியும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் நாம் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்யாமல், குறைந்தளவில் மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அதுமாத்திரமன்றி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வியாபாரிகள் நிர்ணயவிலையை விடவும் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
அடுத்தவாரம் அந்த யோசனை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அந்தச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் நிர்ணயவிலையை விடவும் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்பவர்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணத்தை அறவிடமுடியும். மீண்டும் அதே தவறைச் செய்தால் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கவும் முடியும்.
இதுவரை காலமும் இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு 2500 ரூபாவே தண்டப்பணமாக அறவிடப்பட்டது. அவர்கள் அதனைச் செலுத்திவிட்டு, மீண்டும் அதே தவறைச் செய்வார்கள். எனவே சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|