பாரிய கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பிலான ஒன்பது மருந்துக் கொள்வனவு சம்பவங்கள் பதிவாகியுள்ளது – சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தகவல்!
Monday, October 30th, 20232021ஆம் ஆண்டுமுதல் 2022ஆம் ஆண்டு இறுதிவரையான காலப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுகளில் பாரிய கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பிலான ஒன்பது மருந்துக் கொள்வனவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கணக்காய்வாளரின் அறிக்கைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Frusamide, Trastuzimab, Ceftraixone, Diclofenac Sodium, Etoricoxilo, Cetrizine, Clonazipam, Cefotaxime, Ipratropium ஆகிய மருந்துகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு, இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை ஆகியன செயல்பட்டுள்ள விதம் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதிவுச் சான்றிதழ் இன்றி மருந்துகளை கொள்வனவு செய்தல், போலியான ஆணைவங்களை சமர்ப்பித்தல், தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்தல், மருந்துகளின் லேபிள்களை மாற்றுதல், மருந்து விநியோகஸ்தர்களால் ஆரம்பத்தில் குறிப்பிடப்படும் நிறுவனங்களுக்கு பதிலாக வேறு நிறுவனங்கள் ஊடாக மருந்துகளை கொள்வனவு செய்தல் உட்பட பல்வேறு வகையில் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
”கடந்த இரண்டு வருடங்களில் (2021, 2022) மருந்துகள் காலாவதியானமை மற்றும் மருந்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் காரணமாக இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு 156.5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் ஊழல் – மோசடிகள் பற்றிய பல தகவல்கள் வெளிவந்தாலும், இதுவரை எந்த தரப்பினரும் தண்டிக்கப்படவில்லை.
தவறு செய்பவர்களை தண்டனையின்றி நீக்குவது இலங்கையில் நாகரீகமாகிவிட்டது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் அதே பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்.
மருந்துக் கொள்வனவு மற்றும் விநியோகத்தில் இடம்பெறும் ஊழல் – மோசடிகைள தவிர்க்க சுயாதீன விசாரணை முறையை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
அத்துடன், ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கும் வரை அவர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப்படுவதைத் தடுப்பது அரசாங்கத்தின் மற்றும் ஜனாதிபதியின் பொறுப்பாகும்.” என்றும் ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|