பாரம்பரிய தொழில் துறைகள் பாதுகாக்கப்படுவது அவசியம் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்திரன் வலியுறுத்து!

Tuesday, June 4th, 2019

பாரம்பரியம் மிக்கதும் உடல் நலன்களுக்கு நன்மை தரக்கூடியதுமான மட்பாண்டத் தொழில் துறை இன்று எமது மக்களிடையே அருகி வருகின்றது. இந்த தொழில்துறையை  அழிந்துவிடாது பாதுகாக்கவேண்டியது எம் அனைவரது கடமையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் தனியார் ஒருவர் உருவாக்கியுள்ள மட்பாண்ட தொழிற்சாலையை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மட்பாண்ட தொழில்துறையை தற்போது எமது இளம் சமூகத்தினர் முன்னெடுத்து வருவது குறைவாக உள்ளது. இதற்கு காரணம் இந்தத் தொழில் துறையை ஊக்குவிப்பதற்கான வழிவகைகள் மற்றும் பொருளாதார வசதிகள் குறைவு போன்றன காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பாரம்பரிய தொழில் துறைகளை ஊக்குவிப்பதற்கான பல நலத்திட்டங்களை பெற்றுக்கொடுத்து அவற்றை ஊக்குவித்திருந்தார். இதனால் எமது மக்களின் பாரம்பரிய தொழில்துறைகள் பல பாதுகாக்கப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறான ஒரு நிலை காணப்படவில்லை.

அந்தவகையில் இவ்வாறான எமது பாரம்பரிய தொழில் துறைகளை பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் ஊக்குவிப்புக்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி ஆனந்தகுமார் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் குறித்த பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.