பாரத பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

Thursday, May 11th, 2017

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு விசேட வாகனப் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சர்வதேச வெசாக் வைபவத்தில் கலந்துகொள்ளும் முகமாக வருகைதரும் பாரதப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட வாகனப்போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

பாரத பிரதமர் இன்று மாலை 6 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வரவுள்ளார். இதன் காரணமாக மாலை 6.15 இலிருந்து கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட – பேஸ்லைன் வீதியூடாக பொரளை, டி.எஸ். சேனாநாயக்க வீதி, சமிஞ்சை சந்தி, கிறீன்பாத், தாமரைத் தடாகம் வீதி, பொதுநூல்நிலைய சுற்றுவட்டம், ஆனந்தகுமாரசுவாமி மாவத்த, பித்தளைச் சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கங்காராம மற்றும் சீமா மாலக்க வரையிலும்,

இரவு 7.15க்கு சீமா மாலக்கயிலிருந்து நவம் மாவத்தை, உத்தரானந்த மாவத்த, மொகமட் மாக்கார் மாவத்த, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக தாஜ்சமுத்திரா ஹோட்டல் வரையிலும்,இரவு 8.20க்கு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்து காலி வீதி என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் ஊடாக ஜனாதிபதி மாளிகை வரையிலும்,இரவு 10.30க்கு ஜனாதிபதி மாளிகையிலிருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் ஊடாக காலிவீதியில் தாஜ் சமுத்திரா ஹோட்டல் வரையும்,

நாளை 12 ஆம் திகதி காலை 9.05க்கு தாஜ் ஹோட்டல் காலிமுகத்திடல் சுற்றுவட்டம் கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்ட்டி சந்தி, பித்தளை சந்தி, செஞ்சிலுவை சங்க சந்தி, நூல்நிலைய சுற்றுவட்டம், கிளாஸ் ஹவுஸ் சந்தி, சுதந்திரசதுக்க சுற்றுவட்டம், சுதந்திர சதுக்கம், சுதந்திர மாவத்தை, பௌத்தாலோக மாவத்தை மெட்லண்ட் ஒழுங்கை சந்தி, பௌத்தாலோக மாவத்தை ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம். வரையான பகுதிகளிலும்,

காலை 10.50க்கு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டம், பௌத்தாலோக மாவத்தை, ஜாவத்த சந்தியில் வலப்புறமாக திரும்பி ஜாவத்த வீதி கெப்பட்டிபொல சந்தியில் தெற்கு பக்கமாக திரும்பி கெப்பட்டிபொல மாவத்தை ஊடாக பொலிஸ் கேந்திர படைத் தலைமையக மைதான திடலின் வெளிப்புற பாதை ஆகிய பகுதிகளிலும்,இந்திய பிரதமர் பயணம் செய்யும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் இந்த வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகள் முழுமையாக மூடப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்திய பிரதமர் இன்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் களனி பாலத்தினூடாக பேஸ்லைன் பாதையில் பயணிக்கும் வரையில் மாலை 5.45 இலிருந்து அதிவேக வீதியில் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வரையிலான வீதியின் ஒருநிரல் மாத்திரம் மூடப்பட்டிருக்கும். இந்த நேரங்களில் பேலியகொட பகுதியிலிருந்து கட்டுநாயக்க வரையில் பயணிக்கும் வாகனங்கள் பிரவேசிப்பதில் எந்தவித தடையும் இல்லையென பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: