பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு – ஜனாதிபதி ரணில் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இரண்டு நாள் உத்தியோகபூர்வ வியஜமாக இந்தியா பயணம்!

Thursday, July 20th, 2023

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் இந்த விஜயம் அமையவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா ஜீவன் தொண்டமான உள்ளிட்ட பல துறைசார் தரப்பினருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றுள்ள குறித்த காலப்பகுதியில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரது கீழ் அமைச்சுக்களை மேற்பார்வையிட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராகவும் பணியாற்றவுள்ளனர்.

அதேபோன்று குறித்த காலப்பகுதியில் பணியாற்றுவதற்காக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.

இதற்கமைய 1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் கடந்த வருடம் ஜூலை மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவையடுத்து ஏற்பட்ட ஜனாதிபதி வெற்றிடத்திற்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார். குறித்த வாக்களிப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்றார்.

மேலும் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் ஜூலை மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: