பாதுகாப்பான முறையில் எடுத்துவரப்படவில்லை: கொழும்பிலிருந்து வந்த தபால்களை விநியோகிக்க மறுத்து யாழ் தபாலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Thursday, April 23rd, 2020

யாழ்ப்பாண தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தமக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறி அன்றையதினம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பில் சுமார் 150 ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேற்று இரவு கொண்டுவரப்பட்ட தபால் பொதிகள் கொரோனா வைரஸ் தொடர்பான முறையான சுகாதார விதிகளுக்கு ஏற்ப கொண்டு வரப்படவில்லை என தெரிவித்து குறித்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தமது பாதுகாப்பும்,  பாதுகாப்புக்கான உபகரணங்களும் தமக்கு வழங்கப்படவில்லை என்று  தெரிவித்தும், அதற்கான நடவடிக்கைகள் தமக்கு வழங்கப்படும் வரை விநியோகம் செய்ய மாட்டோம் எனவும் யாழ். தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலையில் யாழ். தபால் நிலைய நிர்வாகம் ஊழியர்களை பணியினை செய்யுமாறு பணித்தபோதும் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட தபால்கள் முறையற்ற வகையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்றும் தபால் பொதிகளை  எடுத்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்களூடாக தமக்கும் பாதிப்பு ஏற்டபட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் அரசு முடக்கப்பட்ட திணைக்களங்களை மீளவும் ஆரம்பிக்கம்போது அதில் பணிபுரியும் ஊழியர்களது பாதுகாப்பும் அதற்கான ஏற்பாடுகளையும் அந்நதந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதிமுதல் பல நிர்வாக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் யாழ். தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் போன்ற எவையும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் தபாலக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இதுதொடர்பில் கேட்டபோது ஊழியர்களுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: