பாதுகாப்பற்ற சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய தரவுத்தளம் – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப்பு!

Saturday, October 23rd, 2021

நாட்டில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மற்றும் பாதுகாப்பற்ற அனைத்து சிறுவர்களின் தரவுகளையும் உள்ளடக்கிய தேசிய தரவுத்தளம் ஒன்று முதல் தடவையாக நிறுவப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இந்த தரவுத்தளம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொலிசார், கிராம உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நேரடியாக இந்த தரவுத்தளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு நேரடியாக மேற்கொள்ளப்படவுள்ளது. சிறுவர் துஷ்பிரோயகம், சித்திரவதை மற்றும் பாதுகாப்பற்ற நிலைகள் தொடர்பில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு நாளாந்தம் 35 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 221 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை, குருநாகல், கம்பஹா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இருந்தும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் சிறுவர்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 24 மணிநேரமும் இயங்கும் 1929 என்ற இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: