பாடப்புத்தகம் தவிர வேறு பயிற்சி நூல்களை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கத் தடை – வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு!

பாடசாலைகளில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் மேலதிக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கென வலயக் கல்விப் பணிப்பாளரின் எழுத்து மூலமான அனுமதி வழங்கப்பட்ட நூல்கள், கையேடுகள் மட்டுமே பாடசாலைகள் கொள்வனவு செய்தோ அல்லது இலவசமாகப் பெற்றோ பயன்படுத்த முடியும்.
பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் தவிர வேறு நூல்களையோ பயிற்சி நூல்களையோ கையேடுகளையோ எனது எழுத்து மூல அனுமதியின்றி மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராசா அறிவித்துள்ளார்.
பல்வேறு மட்டங்களிலும் வியாபார நோக்கத்துடன் தரமற்றதும் பொருத்தமற்றதும் தேவையற்றதுமான பல பயிற்சி நூல்கள், கையேடுகள் மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருப்பதோடு இச் செயற்பாடுகள் பரீட்சை அடைவு மட்டங்களிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
எனவே வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் மேலதிகச் செயற்பாடுகளுக்காகப் பயிற்சிப் புத்தகங்கள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் வலயத்தின் உரிய பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் குழுவினதும் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளரின் சிபார்சுடனும் முன்வைக்கப்பட்டு என்னால் அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைச் சகல அதிபர்களுக்கும் அறியத் தருகின்றேன் என்றார்.
Related posts:
|
|