பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் !
Friday, October 14th, 2016
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறையை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையானது உதவு தொகை வழங்குவதற்காக மட்டும் நடத்தும் ஓர் பரீட்சையாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
நுகவெல மத்திய மாஹா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,
பிரபல பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான ஓர் பரீட்சையாக தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை நடத்தாது மாணவர் உதவு தொகை வழங்குவதற்கான பரீட்சையாக மட்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஓர் போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளது.
சிறுவர்களின் பிள்ளைப் பருவம் பறிக்கப்பட்டு இந்தப் பரீட்சை தாய்மாருக்கான பரீட்சையாக மாற்றமடைந்துள்ளது.இந்த நிலையை உடனடியாக நிறுத்த வேண்டும்.உலகம் போகும் போக்கில் எமது பிள்ளைகள் ஒரே இடத்தில் தேங்கிக் கிடக்கக்கூடாது.
அருகாமையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற எண்ணக் கருவிற்கு அமைய கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பௌதீக வளங்களைப் போன்றே மனித வளங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|