பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டன – முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாகவும் அறிவிப்பு!

Monday, July 25th, 2022

நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் இன்று திங்கட்கிழமைமுதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன.

இலங்கையில் ஏற்பட்ட பாரிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆசிரியர்கள்,மாணவர்கள் போக்குவரத்து செய்வதில் எதிர்கொண்ட இடர்பாடுகளை கருத்தில்கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.

இன்றையதினம் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாகயிருந்தபோதிலும் சில பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகளவில் காணப்பட்டதாக கல்வித்திணைக்ங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவசரகால நிலையின் கீழ் ஆசிரியர்களுக்கு எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுக்கவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் காலப்பகுதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் மகிழுந்துகளுக்கு, நாடுமுழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து பேருந்துசாலை நிரப்பு நிலையங்களின் ஊடாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

வாரத்தில் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து வசதியினை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைய பாடசாலைகள் மூன்று நாட்கள் மாத்திரம் நடத்தப்படுவதுடன் இரண்டு நாட்கள் இணையவழியில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தென் மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு செல்லும் பணிக்குழாமினர் மீண்டும் வீடு திரும்புவதற்கு பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: