பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை; சுகாதார அமைச்சுடன் விரிவான பேச்சுக்கள் நடைபெறுவதாக கல்வி அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு!

பாடசாலைகளை மீளத் திறக்கும் திகதி தொடர்பாக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இரண்டு அமைச்சுக்களும், குறிப்பிட்ட சில வகையான பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதி தொடர்பாக எந்த முடிவும் இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் ஆனால், அதற்கான வழிமுறைகளை வகுக்கும் பணிகளில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதேநேரம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான செய்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுத்து வருவதாகவும், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.
மேலும் மாணவர்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும், அதனால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தீவிரமான விவாதங்கள் இடம்பெறுகின்றன என்றும், சிறுவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு அதிக முன்னுரிமை, கொடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
200 இக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் பாடசாலைகளை ஆரம்பத்தில் மீண்டும் திறக்க முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் குறித்த பாடசாலைகளை ஒரு முறையான திட்டத்தின் கீழ் திறக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சருக்கு வழங்கிய பரிந்துரையில் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
12-18 வயதுடைய மாணவர்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையின்படி பைசர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கதினால் முன்வைக்கப்பட்டது.
அதன்படி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு பைசர் தடுப்பூசியின் 4 மில்லியன் டோஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|