பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாகிவிட்டது – இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிப்பு!
Wednesday, October 6th, 2021பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான காலம் வந்துவிட்டதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு 80 முதல் 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான நிலை இந்த நாட்டில் இதற்கு முன்னர் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாதாரண நிலைக்குத் திரும்புவது குறித்து தற்போது தீர்மானிக்கலாம் ஆனால் சரியான சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சரியான மேற்பார்வையின் கீழ் செய்யப்பட வேண்டும் என்றும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை வந்துவிட்டது என்றும் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டம், சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை முதலில் ஆரம்பித்து, அதன் பின்னர் கட்டம் கட்டமாக ஏனைய பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி ஏற்றியிருத்தல், மாணவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, கண்காணிப்பின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்கும் காலம் வந்துவிட்டதாக விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உரிய ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பில் சிறுவர்களைத் தெளிவுபடுத்துவது கட்டாயமானதாகும் என விசேட வைத்தியர் கீதால் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|