பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளினதும் கற்றல் நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பம் – மாணவர்களது பாதுகாப்பு குறித்து சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

Monday, November 22nd, 2021

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும் 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதவிர, மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சந்தேகித்தாலோ அல்லது தொற்று உறுதி செய்யப்பட்டாலோ பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவ்வாறு மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவரைத் தனிமைப்படுத்துவதற்கான தனி இடமொன்று பாடசாலைகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளின் நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் குறித்துக் கண்காணிப்பது அத்தியாவசியமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: