பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

Wednesday, May 16th, 2018

தனியார் பஸ் கட்டணங்கள் இன்றுமுதல் (16)  உயரும் எனவும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த கட்டண அதிகரிப்பு பஸ் மறுசீரமைப்பு தொடர்பான 12 அளவுகோள்களின் பிரகாரமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றுமுதல் அமுலுக்கு வரும் புதிய தனியார்பஸ் கட்டண அதிகரிப்பின் பிரகாரம் 13 ரூபா கட்டணம் 14 ரூபாவாகவும் 17 ரூபா கட்டணம் 18 ரூபாவாகவும் உயர்வடைகிறது.

அத்துடன் 100 ரூபா கட்டணம் 106 ரூபாவாகவும் 150 ரூபா கட்டணம் 159 ரூபாவாகவும் உயர்வடைகிறது. அதிக பட்ச கட்டணமான 733 ரூபா கட்டணம் 781 ரூபாவாக அதிகரிக்கிறது.

பஸ்கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு கடந்த 14 ஆம் திகதி கூடி ஆராய்ந்தது. பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பான 12 அளவுகோள்களின் படி பஸ்கட்டணத்தை மறுசீரமைப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் ரத்னாயக்க , தேசிய வரவு செலவுத் திணைக்கள பணிப்பாளர் ஹேரத், புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர்அலஹகோன், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலைவி என்.டீ.எஸ் ஜெகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பஸ் சேவைக்கு கிலோ மீட்டருக்கான செலவு,பஸ்சேவைக்கான செலவு என்பவற்றை மீள கணித்து புதிய கட்டணம் தயாரிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

இந்த கட்டண மறுசீரமைப்பு அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இன்று முதல் புதியகட்டணம் அமுலுக்கு வருவதோடு அரைச்சொகுசு பஸ்கட்டணமும் இதற்கமைய மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: