பழ உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை!

Tuesday, July 3rd, 2018

தேசியபழ உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசியபழ உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இறக்குமதி செய்யப்படும் பழங்கள் காரணமாக தேசிய பழ விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் இதற்காக பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்ச்சித் திட்டம் குறித்தும் அவர்களது தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அறுவடை காலத்தில் மேலதிகமாக கிடைக்கும் பழங்களை நீண்ட காலத்திற்கு வைத்துக் கொள்வதற்கான மாற்று தொழில்நுட்ப முறைமைகளை பழ உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நாடளாவிய நிகழ்ச்சித் திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதுதவிர விலங்குகளினால் விவசாய துறைக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: