பழிவாங்கலுக்குள்ளான 1,011 பேருக்கு மீண்டும் நியமனம் வழங்க அனுமதி -அரச சேவைகள் ஆணைக்குழு!

Saturday, July 14th, 2018

கல்வித்துறையில் நிகழ்ந்த அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,011 பேருக்கு மேலதிக ஆளணித் திட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நியமனம் வழங்குவதற்கு அரச சேவைகள் ஆணைக்குழு, கல்வியமைச்சுக்கு அனுமதியளித்துள்ளது.

அரச சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ள அனுமதிக்கமைய இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் தர நியமனம் 231 பேருக்கும் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தர நியமனம் 450 பேருக்கும் இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் தர நியமனம் 321 பேருக்கும் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு மூன்று பேருக்கும் இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு 5 பேருக்கும் இலங்கை ஆசிரியர் சேவை மூன்றாம் தரத்திற்கு ஒருவருக்கும் மேலதிக ஆளணி அடிப்படையில் நிவாரண நியமனம் வழங்கப்படும்.

மேலதின ஆளணியினராக நியமனம் பெறுவோருக்கு இப்பதவிக்கான சம்பளம் மட்டும் வழங்கப்படும். இது தவிர பதவி உயர்வுகளோ சேவை நிரந்தரமாக்கலோ அட்டவணைப்படுத்தப்பட்ட பதவிகளோ வழங்கப்பட மாட்டாது என்பதுடன் அவர்களது நிரந்தர பதவிகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலதிக ஆளணி நியமனம் பெற்றோர் ஓய்வுபெறும்போது அவர்களது நிரந்தர பதவியான இலங்கை ஆசிரியர் சேவையில் அல்லது அதிபர் சேவையிலேயே ஓய்வுபெற வேண்டுமெனவும் அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தயா செனரத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related posts: