பழமரங்களை தறிக்க அனுமதி பெறும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி!

Tuesday, June 26th, 2018

அதிகார சபைகளால் அடையாளப்படுத்தப்படும் பழ மரங்களை தறிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெறும் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவையில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொலநறுவை தொகுதி அமைப்பினை அமைக்கும் நிகழ்வின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராம சக்தி மக்கள் இயக்கம் சிறந்ததொரு செயற்றிட்டமாக தற்போது நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிராம அபிவிருத்தியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் கிராமிய புரட்சி செயற்றிட்டமும் வெகுவிரைவில் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

நாட்டிலுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்கான புதிய கடன் திட்டமொன்றினை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதனூடாக வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் அதேவேளை உள்நாட்டு உற்பத்தி துறையில் உத்வேகமும் ஏற்படும்.

தேசிய பொருளாதார சபையினூடாக நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் தொடர்பாக விரிவான கவனம் செலுத்தப்படுகின்றது.

உள்நாட்டு பழ உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழங்களுக்கு அதிக பெறுமதியை பெற்றுக் கொடுப்பதற்காக விவசாய திணைக்களத்தாலும் அத்துறைசார் நிபுணர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெயரிடப்படும் பழமரங்களை அத்தாட்சிப் பத்திரமின்றி வெட்டுவதை தடை செய்யும் திட்டமொன்றை எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தவும் அரசு எதிர்பார்த்துள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts: