பல்கலை மாணவர்களின் பெற்றோரை போலிசார் விசாரணை செய்தது ஏன்? நீதிமன்றம் கேள்வி!

Saturday, December 3rd, 2016

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மரணமடைந்த சம்பவம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது, படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோரை மாங்குளம் பொலிஸார் விசாரணை செய்தது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் காவல் துறையின் புலனாய்வு பிரிவினருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன், கிளிநொச்சியைச் சேர்ந்த நடராஜா கஜன் என்ற இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

துப்பாக்கிக்குண்டு தாக்கியதில் ஒரு மாணவனும், துப்பாக்கிச் சூட்டையடுத்து அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் மற்ற மாணவனும் உயிரிழந்திருந்த போதிலும், சம்பவம் நடைபெற்ற உடன் இரண்டு மரணங்களும் விபத்து மரணம் என காவல்துறையினர் திரித்துக் கூற முற்பட்டிருந்தனர்.

இந்தப் பின்னணியில் இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும்போது வெளி மாவட்டமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாங்குளம் நகர காவல்துறையினர் இறந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து விசாரணை செய்தமை தொடர்பில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

இதனையடுத்தே காவல்துறையினரின் இந்த நடவடிக்கை குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து காவல்துறையினரையும் வரும் 16 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதவான் ஒத்தி வைத்துள்ளார்.

 _92811152_university

Related posts: