பல்கலை கல்விசாரா தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் – அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, May 17th, 2024

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக மாணவர்கள் பட்டம் பெறுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிள ரீதியில் கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்து பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் சுமார் ஒன்றரை இலட்சம் மாணவர்களின் பட்டப் படிப்பினை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்த பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி குறித்த வழிகாட்டல் கையேடு வெளியிடுவதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் அமைச்சரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என பல்கலைக்கழக ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: