பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் ஒத்துழைப்பு வழங்குங்கள் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்து!

Sunday, July 9th, 2023

சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எங்களது அரசியல்.  எனவே, மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் எமக்கு  ஒத்துழைப்பு வழங்குங்கள்‘ என , நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் கொட்டகலைக்கு வருகை தந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது.

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கேந்திரமாக கொண்டு பல்லைக்கழகத்தின் முதற்கட்ட தொகுதியினை நிறுவுவதற்கும், மேலும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செல்வதற்குமான இறுதிக்கட்ட கலந்துரையாடலாக இது அமையப்பெற்றது.

அத்துடன் பல்லைக்கழகத்தில் எந்தவிதமான பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மிக விரைவில் இலங்கை அரசு மற்றும் சர்வதேச ரீதியிலான உதவியுடன் இங்கு பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை நடைபெற்றது.

அத்தோடு, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி அமைச்சர்,  பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.

கல்லூரியின் பீடாதிபதி மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமானும், கல்வி அமைச்சரும் கலந்துரையாடினார்கள். கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் கேட்டறிந்துக் கொண்டார்கள்.

இதன்போது கல்லூரிக்குத் தேவையான விடயங்கள் தொடர்பில் எம்மிடம் மாணவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்தார். அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் உடனடி பணிப்புரையை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

00

Related posts: