பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மே நாளில் யாழ் நகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி வலியுறுத்து!

Thursday, May 2nd, 2024

கடந்தகால தமிழ் அரசியல் தரப்பினரது சுயநலன்களும் தோற்றுப்போன வழிமுறைகளுமே எமது இனத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் தொழில் துறைகளால் உழைப்பாளர்கள் நசுக்கப்படுவதற்கும் காரணமாகியிருந்தன என சட்டிக்காட்டியுள்ள யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்கணராஜா பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உலக தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட மே தின நிகழ்வுகள் நேற்றையதினம் பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

இதில் அதிதியாக கலந்துகொண்டு உழைப்பாளர்களை வாழ்த்தி அவர்களது உரிமைகளை வலியுறுத்தி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

உண்மையில் எமது மக்களோ எமது உழைப்பாளர்களோ தோல்வியடையவில்லை. அவர்கள் இன்றும் தமது வெற்றிக்கான திசைவழி நோக்கி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் கடந்தகால தமிழ் அரசியல் தலைமைகளின் ஆயுத வழியிலான மற்றும் அரசியல் ரீதியான  வழிநடத்தல்கள் அல்லது அவர்களது சுயநலன்சார் நடவடிக்கைகளே தோற்றுப்போனது இதுதான் வரலாறு.

உதாரணமாக தமது மோசடிகளையும் கொள்ளைகளையும் மூடிமறைக்க தமிழ் மக்களிடையே குறிப்பாக இலங்கை மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இடையே இருந்துவந்த ஒற்றுமையை சின்னாபின்னமாக்கி பெருமை இன்று பாரம்பரியம் பேசும் அகில  இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியையே சாரும். இவர்கள் துரோகத்தனம் செய்யாதிருந்திருந்தால்   தமிழ் மக்கள் என்ற அடையாளத்துடன் வேற்றுமைகள் இன்றி இலங்கையின் விகிதாசாரத்தில் நாம் இன்று இறுமாப்புடன் இருந்திருக்க் முடியும்

மலையக தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையே இருந்துவந்த பிரிக்கப்பட முடியாத ஒற்றுமையை குலைத்த துரோகத்தனமான வரலாற்றை கொண்ட கட்சிதான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.

இதன் தலைவர் ஜீ.ஜீ பொன்னம்பலம் ஏழை மக்களின் வயிற்றிலடித்து காங்கேசன்துறை தொழிற்சாலையில் தான் மேற்கொண்ட மோசடிகளை மறைப்பதற்காக அல்லது அதிலிருந்து தப்புவதற்காக இலங்கையின் அன்றைய அரசின் கைம்பொம்மையாக இருந்து இந்திய மக்களது தொழில் உரிமைகள் மறுக்கப்பட்டு இலங்கையிலிருந்து வெளியேற்ற இலங்கை – இந்திய அரசுகளால் அன்று ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை ஏற்று அதற்காக வாக்களித்து இந்திய தமிழர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் துரோகத்தனத்தை செய்திருந்தார்.

இதேவேளை ஒவ்வொரு நாடும் தத்தமது நலனை கருத்திற் கொண்டுதான் இலங்கையை கையாளும் அதில் நாம் சரியாக இருந்துகொள்வது அவசியம்  என எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி கூறுவதுண்டு.

இதனால் அவர் தமிழ் மக்களதும் உழைக்கும் தொழிலார்களதும் நலன்களில் வெளிப்படையாக இருந்தே அதுசார் உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொடுத்துவந்திருக்கின்றார்.

அந்தவகையில் பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும் ஆனால் இதர தரப்பினர் இவ்வாறான தினங்களில் மட்டுமே மேடைகளில் உரிமை சுதந்திரம் என முழங்கவதுண்டு.

ஆனால் நாம் அவ்வாறான செயற்பாடுகளை கொண்டவர்கள் அல்ல. ஈ.பி.டி.பி ஆகிய நாம் அவ்வாறான தவறான வழிமுறையில் மக்களை வழி நடத்தியது கிடையாது. வழிநடத்தவும் போவதில்லை. அதுமட்டுமல்லாது எமது அரசியல் கொள்கைகளும் மக்கள் சார் நலனிலிருந்து முன்னெடுக்கும் வழிமுறைகளும் தவறானாதாகவும் தோற்றுப்போனதாகவும் வரலாறும் கிடையாது

இதேனேரம் ஆயுதப் போராட்டம் தான் உரிமைகளையும் தொழில் நிலைகளையும் பெற ஒரே வழி என்றிருந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் 1987 களின் பின்னர் அது சாத்தியமற்றது என தீர்மானித்துத் தான் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா  90 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உரிமை மற்றும் தொழில்சார் பிரச்சினைகளுக்கான தீர்வினை காணமுடியும் என தனது பயணத்தை முன்னெடுத்திருந்தார். இதன்மூலம் பல்வேறு நன்மைகளும் எமது மக்களுக்கு கிடைத்துவருகின்றது.

இந்த உண்மை நிலையை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் தமது வழிமுறையை மாற்றியமக்க வேண்டும்.

அந்த வகையில் எமது மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சார் மற்றும் தொழில் சார் பிரச்சினைகளை மட்டுமல்லாது அன்றாட பிரச்சினைகளுடன் அபிவிருத்தியையும் வெற்றிகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடைமுறைச் சாத்தியமானதாக வழிமுறையே சாத்தியமானதாக உள்ளது.

அதன் வழியிலேயே மக்களாகிய உங்களது  முன்னெடுப்புக்களும் இருப்பது எதிர்காலத்திற்கு சிறந்தது என்று இன்றைய உழைப்பவர் நாளில் உறுதிகொள்வோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: