பருவநிலை மாற்றத்துக்கு உடனடி தீர்வு: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!

பருவநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் எவ்வளவு வேகமாக மாறிவருகிறதோ அதைக் காட்டிலும் விரைவாக பருவநிலை மாறிக் கொண்டிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு இம்முறை கேரளத்தில் பருவ மழை தீவிரமாக பெய்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளக் காடாக மாறியது. ஏறத்தாழ 370 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் உடைமைகளையும், உறைவிடங்களையும் இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்தியாவின் தீவிர இயற்கை பேரிடராக அது அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று கலிபோர்னியாவிலும், கனடாவிலும் வனப்பகுதியில் நேரிட்ட தீ விபத்தும் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தின. காட்டுத் தீயின் கோரப்பிடியில் அப்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலாகின. இந்நிலையில், 2018-ஆம் ஆண்டின் பருவநிலை பொருளாதார அறிக்கையை நியூயார்க் நகரில், அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றமும், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளும் பெரும் சவாலாக விளங்குகின்றன.கேரள வெள்ள பாதிப்பாகட்டும், கலிபோர்னியா தீ விபத்தாகட்டும், அவை அனைத்துமே இயற்கை சீற்றங்களின் வெளிப்பாடு. இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் பேரழிவையும், பெருந்துன்பத்தையும் உலக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
இத்தகைய பேரிடர்களில் அதிக பாதிப்புக்கு ஆளாவது பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களும், சாமானிய மக்களும்தான். கடந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் இயற்கை பேரழிவுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். சுமார் 32,000 கோடி டாலர்கள் (ரூ.22,79 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடந்தன.
இன்றைய சூழலில் உலகம் அதிவேகமாக உருமாறி வருகிறது. ஆனால், அதை விட துரிதமாக பருவநிலை மாறிவருவது கவலைக்குரிய விஷயம். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். ஏனெனில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறிப்பிட்ட வரம்புக்குள் இருப்பதில்லை. சுற்றுச்சூழல், பொருளாதாரம், அமைதி என அனைத்து விஷயங்களிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது என்றார் அன்டோனியோ குட்டெரெஸ்.
இந்நிகழ்வில், சர்வதேசத் தலைவர்களும், ஐ.நா. பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related posts:
|
|