பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு!

Friday, July 14th, 2017

பருத்தித்துறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் தொடர்பில் கடற்றொழிலாளர்களின் கருத்துக்களை கண்டறியும் விஷேட கலந்துரையாடல் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சின் செயலாளர் மங்கலிக்கா அதிகாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பிரசன்னத்துடன் நடைபெற்றது.

பருத்தித்துறையில் மேற்படி கலந்துரையாடல் இன்றையதினம் இடம்பெற்றது. அசிய அபிவிருத்தி வங்கியின் 7000 மில்லியன் (எழுநூறு கோடி) நிதி உதவியுடன் மேற்படி மீன்பிடித் துறைமுகம் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இத்துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும் நோக்கில் இவ் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இவ்வாறு உத்தேசிக்கப்பட்டுள்ள மீன்படித்துறைமுகம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் கொட்டடி கிராமம் முழுமையாகப் பாதிக்கப்படும் அதேவேளை சின்னத்தோட்டம் கிராமமும் பகுதியளவில் பாதிக்கப்படும் என கடற்றொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் இத்துறைமுகம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் நெருக்கடிகள் மற்றும் சாதக பாதக நிலைகள் தொடர்பில் விஷேடகவனம் செலுத்தப்பட்டது.

இதுவிடயம் தொடர்பாக கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் குறித்த பகுதி கடற்றொழிலாளர் சங்கங்க பிரதிநிதிகள் விஷேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்து அதனூடாக இந்த துறைமுக நிர்மாணம் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே இறங்குதுறை நிர்மாண பணிகளுக்கென உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சின் செயலாளர் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஷ்வரன், வடமராட்சி பிரதேச செயலர் ஜெயசீலன் கடற்றொழில் நீரியல்வழத்துறை உதவிப்பணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட துறைசார்ந்தவர்கள் உடனிருந்தனர்.

Related posts: