பருத்திதுறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் உடனடி இடமாற்றம் – வைத்தியர் கமலநாதன் தற்காலிக அத்தியட்சகராக நியமனம்!

Tuesday, April 14th, 2020

கொரோனோ வைரஸ் தொற்று சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து வந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் மீதான விசாரணைக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பருத்திதுறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி வந்த வைத்தியர் குகதாசன் வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அங்கு கடமையாற்றும் வைத்தியர்களால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்மைகய குறித்த வைத்திய அத்தியட்சகரை உடனடியாக இடமாற்றி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே நேற்றையதினம் பொது அமைப்புக்கள் ஒன்று திரண்டு யாழ்.ஊடக அமையத்தில் அவரது முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருந்தன.

இந்த நிலையிலையே குறித்த வைத்திய அத்தியட்சகர் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை அங்கு கடமையாற்றி வைத்தியர் கமலநாதன் தற்காலிக அத்தியட்சகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மத்திய சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகளையடுத்து நாளை முன்னெடுக்கப்பட இருந்த போராட்டமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டிபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: