பரீட்சையில் சித்தியடைந்தவர்களை அதிபர்களாக நியமிக்க அமைச்சரவை அனுமதி!

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை அதிபர்களாக நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2015ஆம் ஆண்டு தரம் மூன்றுக்கான அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது.இந்தப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 3901 பேர் அதிபர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
நேற்றைய தினம் அமைச்சரவையின் அனுமதி கிடைத்தது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
தரம் மூன்றுக்கான அதிபர் சேவைக்காக பத்து ஆண்டுகளின் பின்னர் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது.இந்தப் போட்டிப் பரீட்சைக்காக 21,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 19,000 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். போட்டிப் பரீட்சையின் ஊடாக 3,858 தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மேலும் 43 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டிப் பரீட்சையில் கூடுதல் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இனி வரும் காலங்களில் ஆண்டு தோறும் வெற்றிடங்களுக்கு ஏற்ப போட்டிப் பரீட்சை நடத்தப்படும் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு எப்போது அதிபர் நியமனம் வழங்கப்படும் என்ற உறுதியான திகதிகளை அமைச்சர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|