பயிற்சி பெறுநர் இன்மையால் பயிற்சியை இடைநிறுத்தும் நிலை – பனை அபிவிருத்தி சபை கவலை!

அரிய பல பயன்களையும் மக்களுக்கு வழங்கி வானுயர உயர்ந்து தமிழர் அடையாளமாக விளங்கும் பனையின் பயன் மக்களைச் சென்றடைவதற்காகவும் பனையின் அழிவைத் தடுக்கும் முகமாகவும் ஆரம்பிக்கப்பட்ட மரச்சிற்பத் தொழிற்சாலை பயிற்சி பெறுநர்கள் இல்லாமல் மூடும் நிலையில் உள்ளது என்று பனை அபிவிருத்திச் சபை கவலை தெரிவிக்கின்றது.
பனையின் பாகங்களை மூலப்பொருள்களாகக் கொண்ட பல திட்டங்களை பனை அபிவிருத்திச் சபை முன்னெடுத்து வருகின்றது.
வருடாவருடம் புதிய தொழில்நுட்பங்களுடன் பயிற்சி வழங்கி பனம் சார் தொழில்களை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள் மற்றும் கருவிகள் தொழில்நுட்ப ஆலோசனை, சந்தை வாய்ப்பு என்ற சேவைகளையும் வழங்கி வருகின்றது.
பனைகள் தறிக்கப்படுவதை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்த சபை வெட்டப்படும் பனை மரத்தின் அடிக் குற்றிகளைப் பயன்படுத்தி சிற்பத் தொழில்நுட்பத்துடன் ஊடாக கலையம்சங்கள் மிக்க பொருள்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டது. இதன்மூலம் இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
எனினும் போதியளவில் பயிலுநர்கள் இணையவில்லை. 20 பேரை இணைத்தல் எனும் கொள்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் 5 பயனாளர்களே தற்போது வரை இணைந்துள்ளனர். இதனால் பயிலுநர்கள் இன்மையால் மூடும் நிலைக்கு நிலையம் தள்ளப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்கள் இன்றி வேலை வாய்ப்பை தேடி அலையும் இளையோர்கள் இதில் இணைவதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெறுவதோடு பனை அபிவிருத்திக்கும் வலுச் சேர்க்க முடியும் எனவே பயில்வதற்கு பயனாளர்கள் முன்வர வேண்டும் என்று சபை தெரிவித்துள்ளது. பயில விரும்புவோரை 021 222 2034 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.
Related posts:
|
|