பயன்படுத்தபட்ட முக்கவசங்கள் மீண்டும் விற்பனைக்கு? எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Saturday, September 12th, 2020

கொழும்பு, கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் 3128 உலர வைக்கப்பட்டிருந்த முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மீண்டும் பயன்படுத்த முடியாத முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த முகக்கவசங்கள் கடந்த 10 ஆம் திகதி மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புறக்கோட்டை பொலிஸாருடன் குறித்த இடத்தை சுற்றிவளைத்த போது அங்கு ஆயிரக்கணக்கான நீலம், வௌ்ளை மற்றும் KN 95 ரக முகக்கவசங்கள் உலர வைக்கப்பட்டிருந்ததாக கோட்டை பொது சுகாதார பரிசோதகர் எம்.பீ.லால் தெரிவித்தார்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், மழையில் நனைத்த காரணத்தால் குறித்த முகக்கசவங்களை இவ்வாறு உலர வைத்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், சந்தேகத்தின் பேரில் புறக்கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் உரிமையாளர் மற்றும் முகக்கவசங்கள் தொகை சுகாதார அதிகாரி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகக்கவச தொகை மற்றும் அதன் உரிமையாளர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது சுகாதார பரிசோதகர் எம்.பீ.லால் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: