பயனற்றுக் கிடக்கும் பொருளாதார மைய நிலையம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Sunday, June 3rd, 2018

கிளிநொச்சி அம்பாள் குளம் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள நாற்பது கடைகளில் இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன.

விரைவில் அதுவும் மூடப்பட்டு பொருளாதார மத்திய நிலையம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாற்பது கடைகள் காணப்படுகின்றன. இதில் தற்போது இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கிவருகின்றன.

இந்த இரண்டு கடைகளையும் தங்களாலும் தொடர்ந்தும் இயக்க முடியுமா என்பது சந்தேகமே என அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாற்பது கடைகளும் மாவட்டச் செயலகத்தால் கேள்வி மனுக் கோரப்பட்டு வழங்கப்பட்டன. ஆனால் எட்டுமாதம் ஆன நிலையில் இரண்டு கடைகள் மாத்திரம் இயங்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலும் மொத்த வியாபார செயற்பாடுகளை விரிவாக்கி நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் அம்பாள்குளத்தில் பல மில்லியன்கள் ரூபா செலவில் குறித்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.

பொருத்தமான இடத்தில் இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிலையில் இந்த நிலையத்தின் செயற்பாடுகளை விரிவாக்கும் வகையில் மாவட்டத்தில் எந்த விதமான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே மாவட்ட மட்ட உயரதிகாரிகள், அரசியல் தரப்பினர்கள் என்போர் முன்வந்து பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனுடன் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts: