பயணத் தடை நீக்கம் தொடர்பில் சனியன்று தீர்மானிக்கப்படும்!

Thursday, June 17th, 2021

நாட்டில் பயணத் தடை அமுலில் இருக்கின்ற போதிலும் வீதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமையன்று பயணக்கட்டுபாடு நீக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்குவதற்கு முன்னர் கொவிட் சமூக பரவல் தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வீதிகளில் செல்லும் மக்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் முழுவதும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவகள் பணிப்பாளர் நாயகம்  அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நோய் எந்த அளவு சமூகத்திற்கு பரவியுள்ளது என்பது தொடர்பில் சனிக்கிழமை வரை உறுதி செய்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநெரம் பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு அவர் கூறியுள்ளார். அத்துடன் சனிக்கிழமை தீர்மானமிக்க ஒரு நாள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டினை மக்கள் மீறி செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றதென சுகாதார அமைச்சர் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை 28ஆம் திகதி வரை நீடிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் கூடிய தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினால் கோவிட் தொற்றில் வீழ்ச்சி காணப்படுவதாக பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டும் பயணக் கட்டுப்பாட்டினால் கோவிட் நோயாளர்களின் வீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என்ற காரணத்தினாலும், சுகாதாரத்துறையினரின் தொடர் வலியுறுத்தலினாலும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தேசிய பாதுகாப்புச் சபையில் விரிவாக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: