பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு – இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை இடம்பெறும் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022

இலங்கையில் நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான உறுதிமொழிகள் சட்டமூலத்தில் பரிசீலிக்கப்படுமா என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அதேநேரம், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என நீதியமைச்சர் தெரிவித்திருந்ததை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஏன் இந்த சட்டமூலத்தை முன்வைத்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும், கேள்விகள் எழுப்பப்பட்டபோது, ​​சட்டமூலத்தை முதலில் சமர்ப்பித்து பின்னர் விவாதிப்பதே நடைமுறை என வெளிவிவகார அமைச்சர் எடுத்துரைத்தார்.

சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்படும்போது விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றும் சபையின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவே இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குடிமகனும் இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்திற்காக காத்திருக்கிறது என்றும் உரிய நடைமுறையை அரசு கடைபிடிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: