பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் பிரதமர் மஹிந்தவுடன் இந்திய இராணுவ தளபதி ஆராய்வு!

இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியிருந்த இந்திய இராணுவ தளபதி ஜெனரல் நராவனே நேர்மறையான இந்த தொடர்பானது, இருநாட்டு மக்கள் மற்றும் அனைத்து மட்டத்திலுமான இருதரப்பு உறவை உறுதிபடுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்றையதினம் அலரி மாளிகையில் சந்தித்திருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயர் பயிற்சிகளை வழங்கல் உள்ளிட்ட இந்திய இராணுவம் மிக நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கிவரும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்திருந்தார்.
இவ்விஜயத்தின் போது ஜெனரல் நராவனே அனுராதபுரம் திசாவௌவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவை செயலணி பயிற்சி பாடசாலைக்கு ஓட்டுனர் மற்றும் துப்பாக்கிச் சுடல் பயிற்சிகளுக்காக பயன்படுத்தக்கூடிய மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் மத்தியில் கருத்து தெரிவித்த ஜெனரல் நராவனே -, எதிர்காலத்தில் விசேடமாக பயிற்சி துறையில் தொழில்நுட்பம் என்பது பெரும் பங்குவகிக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
நிலையான இராணுவத்தை பேணுவதற்கான செலவை கருத்திற் கொள்ளும் போது மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதிகளின் மூலம் பயனுள்ள செயற்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் ஜெனரல் நராவனே சுட்டிக்காட்டினார்.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நாட்டிற்காக சேவையாற்றிய பின்னர் படைவீரர்களை கண்காணித்து பராமரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|