பம்பலப்பிட்டி இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் மேலும் இருவரது கடவுச்சீட்டு முடக்கம்!

Saturday, August 27th, 2016

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தி படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் சுலைமான் ஷகீப்பின் கொலை தொடர்பில் மேலும் இரண்டு வர்த்தகர்களது கடவுச் சீட்டுக்களை முடக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த இரண்டு வர்த்தகர்களிடத்திலும் வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டதாகவும் இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு வர்த்தகர்களில் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாவை கடனாக மொஹமட் சுலைமான் ஷகீப்பிற்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சந்தேகத்துக்குரியவர்களாக பெயரிடப்பட்டு கடவுச் சீட்டு முடக்கப்பட்ட ஐவரிடமும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

நீண்ட நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணைகளில் சகீபுடன் அவர்களுக்கு இருந்த தொடர்பு மற்றும் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விசாரணை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் வாக்கு மூலங்களும் பெறப்பட்டதாக குற்றத் தடுப்புப் பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதனைவிட வர்த்தகர் சகீபின் படுகொலைக்கு முன்னர் அவரை கடத்திச் செல்ல சிறிய ரக கார் ஒன்று வந்துள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

பொலிஸார் நேற்று நண்பகல் ஆகும் போதும் 10 இற்கும் மேற்பட்ட தனியார் சி.சி.ரி.வி. காட்சிப் பதிவுகளை விசாரணைகளுக்காக பெற்றிருந்த நிலையிலேயெ  குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

விசாரணைகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 12 பொலிஸ் குழுக்களில் மூன்று குழுக்கள் தலை நகரின் பிரதான இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமராக்களை ஆராயும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

அதன்படி கொள்ளுபிட்டி, தும்முல்ல சந்தி, பௌத்தாலோக்க மாவத்தை, பொரளை, ஒருகொடவத்தை, களனி வரையிலான அனைத்து சி.சி.ரி.வி. காட்சிகளும் இந்த சிறப்பு ஆய்வுக் குழுவினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதனை விட மாவனல்லை பகுதியில் விசாரணைகளுக்கு அனுப்பட்டிருந்த குற்றத் தடுப்புப் பிரி்வின் பொலிஸ் பரிசோதகர் ரணசிங்கவின் கீழான இரு பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக நேற்று அங்கு மற்றொரு பொலிஸ் குழுவும் அனுப்பட்டுள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ள நிலையில் அடுத்து 36 மணித்தியாலங்களுக்குள் சந்தேக நபர்களை கைது செய்ய முடியுமாக இருக்கும் என நம்புவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று மாலை வரை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்தேகிக்கத்தக்க ஐவர் தொடர்பிலும் 10 தொலை­பேசி இலக்கங்கள் குறித்தும் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகர் மொஹமட் ஷகீப் கடந்த 21ஆம் திகதி பம்பலப்பிட்டி கொத்தலாவல வீதியிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக இனந்தெரியாத குழுவினால் கடத்திச் செல்லப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கேகாலை – மாவநெல்ல பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: