பனைவளத்தை மூலதனமாக்கி வாழ்வியலை வெற்றிகொள்வோம் –ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

இயற்கையாக கிடைக்கும் பனைவளத்தை பொருளாதார மூலதனமாக கொண்டு வறுமையில் வாழும் மக்களை சிறந்ததொரு வாழ்வியல் நிலைக்கு இட்டுச்செல்ல அயராது பாடுபடுவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச பனம் கைப்பணி உற்பத்தியாளர் ஒருதொகுதியினருடனான சந்திப்பு வேலணை பிரதேச ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எமது மக்களை நாட்டில் நடந்த கொடிய யுத்தம் வெறுவிலிகளாக்கியுள்ளது. ஆனாலும் வாழ்வியலை எவ்வாறேனும் வெற்றிகொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் எமது மக்கள் தன்னம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது மக்களிடையே இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கணவனை இழந்து பெண்களை குடும்பத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களும் அதிகளவில் மிக வறிய நிலையில் காணப்படுகின்றன.
இவர்களது வாழ்வியல் நிலையை எவ்வாறேனும் முன்னேற்றவேண்டும் என்று எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை உருவாக்கி அதனூடாக வறிய மக்களின் வாழ்வியலில் ஓரளவு மலர்ச்சியை உருவாக்கி காட்டியிருந்தார். அவரது அத்தகைய ஒரு சாதனை தான் இன்று கைதடியில் அமைந்துள்ள பனை ஆராட்சி நிலையம்.
கடந்த காலத்தில் நாம் முன்னெடுத்த செயற்றிட்டங்களூடாக பனம்பொருள் சார் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அதுசார் தொழில் பயிற்சி பட்டறைகள் மேற்கொண்டு பல துறைசார் வல்லுநர்களை உருவாக்கியிருந்தோம். அதனூடாக பல வறிய குடும்பங்களுக்கு நிலையான பொருளாதாரத்தை ஊருவாக்கி காட்டியிருந்தோம்.
ஆனாலும் 2015 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சி மாற்றத்தின் பின்னரான காலப் பகுதியில் அத்துறை சார்ந்தவர்களை ஒன்றிணைத்து அத்தொழிலை விரிவாக்கம் செய்வதில் முன்னேற்றம் அடைந்துவருவதை அவதானிக் முடிகின்றது.
இந்நிலையில் தேர்ச்சிபெற்ற பனம் கைவினைப்பொருள் சார் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்து பனை சார் உற்பத்தியாளர் ஒன்றியம் என்ற ஒரு கட்டமைப்பை பனைவளம் உள்ள ஒவ்வொரு பிரதேசம் தோறும் கட்டமைத்து அதனூடாக பனை வளத்தை மூலதனமாக்கக்கொண்டு எமது பகுதிகளில் காணப்படும் வறுமை நிலையை இல்லாதொழிக்க முயற்சி மேற்கொண்டுவருகின்றோம். இதனூடாக முடியும் என்ற நம்பிக்கையும் எம்மிடம் உண்டு.
அதற்கான பல செயற்றிட்டங்களும் வழிமுறைகளும் எம்மிடம் இருக்கின்றன. அதை வெற்றிப் பாதைநோக்கி முன்னெடுத்துச் சென்று வாழ்வாதார முன்னேற்றத்தை எட்டுவதே உங்கள் ஒவ்வொருவரது நோக்கமாக இருக்கவேண்டும் என்று கூறிய தேசிய அமைப்பாளர். அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் குறித்த பிரதேச உதவி நிர்வாக செயலாளருமான திருமதி ஜே.அனுஷியா கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் பிரதீபன் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சாந்தாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|