பனம் பொருளிலான உற்பத்திகளுக்கு பயிற்சிகள் வழங்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை !

பனை அபிவிருத்தி சபை பனம்பொருளிலான உற்பத்திகள் மற்றும் கைப்பணி பொருள்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பனம்பொருள் உற்பத்தியாளர் அமைப்புக்களை கிராம மட்டங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சபையின் இந்த ஆண்டிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்போது கிராமமட்டங்களில் உற்பத்தியாளர்களை ஒன்று சேர்த்து பனம்பொருள் உற்பத்தியாளர் அமைப்புக்கள் உருவாக்கப்படவும் உள்ளன. கிராம மட்டங்களில் குறைந்தது இருபது பேர் கொண்ட குழுக்களை அமைத்து இதற்கான உற்பத்தியாளர் அமைப்புக்களை ஆர்வம் உள்ளவர்கள் ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்க முகாமையாளர் கெ.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
உற்பத்தியாளர்கள் அமைக்கப்படும் இந்த குழுக்களுக்கு பனை அபிவிருத்தி சபை அதற்கான உதவிகளை வழங்கும்.
குறிப்பாக பனம்கைப்பணி மற்றும் பனம் பொருளிலான உற்பத்திகள் போன்றவற்றுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியின் முதலில் உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் ஏனைய உதவிகளை சபை வழங்கும். பனம்பொருளிலான சகல உற்பத்திகளையும் பனை அபிவிருத்தி சபை அதிகரிக்கவுள்ளது. இதற்கான அபிவிருத்தி வேலைத்திட்;டங்கள் யாவும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்ட ஏற்பாடாகத்தான் கிராம மட்டங்களில் இவ் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சபையினால் பனம் கைப்பணி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் ஊடாக உற்பத்தியாளர்கள் இணைக்கப்பட்டு அவற்றுக்குத் தொடர்ந்து ஆறு மாத காலத்திற்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
தற்போது புதிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமமட்டங்களில் உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து ஓர் அமைப்புக்களை எற்படுத்தி சபையுடன் தொடர்புகொள்ளும் பட்சத்தில் அதற்கான கால உதவி திட்டங்களையும் சபை வழங்கும்.
இவ்வாறான பனம் உற்பத்தியாளர்கள் பனம் உற்பத்திகளை அதிகரிக்கவும் அதற்கான பயிற்சிகளைப்பெற ஆர்வமுடையோர் சபையுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கைதடியிலுள்ள சபையின் ஆராய்ச்சிப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பனம்பொருளிலான ஐஸ்கிறீம், யோகட், கேக் உட்பட ஏனைய உணவுப் பொருள்களின் தயாரிப்புகள் பயிற்சிகளை உற்பத்தியாளர்களுக்கு வழங்கவும் ஆராய்ச்சிப் பிரிவு தயாராகவுள்ளது. இவ்வாறான சகல பனம் உற்பத்தி பொருள்களுக்கான சகல பயிற்சிகளை உற்பத்தியாளர்கள் பெறுவதற்கு ஆர்வமாக இருக்கலாம். உற்பத்தியாளர்கள் ஒன்றுசேர்ந்து அதற்கான அமைப்புக்களை ஏற்படுத்தி சபையுடன் தொடர்பு கொள்ள முடியும்.
Related posts:
|
|